Wednesday, December 18, 2013

இந்திய மீனவர்கள் கைது .இலங்கை அட்டுழியம்

<அவர் நகர தந்தை. அவரிடம் ஒரே செய்தியே வெவ்வேறு முறையில் கூறும்போது அவரின் மனநிலையை காணலாம் ************************************************************** அய்யா , நேற்று இரவு ,பக்கத்து தெரு பையனை, பக்கத்து ஊர்காரன் அடித்து விட்டானாம் விடப்பா இவன் தண்ணி அடித்து விட்டு ஏதாவது தகராறு பண்ணியிருப்பான் .அவன் இவனை போட்டு அடித்து இருப்பார்கள் -என்கிறார் ************************************************************* இதே செய்தியை வேறு மாதிரி கூறினால் , அய்யா , நேற்று இரவு நம்ம ஊரு பையனை வெளி ஊர்க்காரன் அடித்துவிட்டானாம் . --அதெப்படி ,அவன் அடிக்கலாம் இவன் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா கூட போலீஸ் கிட்ட அல்லது பெரியவங்க நம்ம கிட்ட சொல்லியிருக்கலாம் இல்லயா . இவனுங்க எப்படி கைய நீட்டுலாம் ?- என்கிறார் ************************************************************** நமது பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் , தமிழக மீனவர்கள் -இலங்கை கைது எனக்கூறி பக்கத்து தெரு மனப்பான்மையை மத்திய அரசுக்கு உருவாக்கி வருகிறது. ஆனால் இந்திய மீனவர்கள் கைது .இலங்கை அட்டுழியம் என எழுதி நம்ம ஊரு மனப்பான்மையை மத்திய அரசுக்கு கொண்டு வரவேண்டும் மீடியாக்கள் மனது வெய்த்தால் இது சாத்தியமே

Monday, November 8, 2010

dinamani vs sun netwotk





********************************************
தினமணி தலையங்கம்: தமிழுக்கு என்ன லாபம்?
********************************************


தமிழை வளர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் ஒரு வழியாக தமிழ்த் திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைப்பதும் தமிழை வளர்க்கும் என்று அரசு கருதியதால் தமிழில் பெயரிட்டு வெளியாகும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதனால் தமிழும் வளரவில்லை, அரசுக்குக் கிடைக்க வேண்டிய கேளிக்கை வரியும் கிடைக்காமல் போனது என்பதுதான் மிச்சம்.

இந்த வருவாய் இழப்பால் நேரடியாகப் பாதிக்கப்படுவது பஞ்சாயத்து நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள்தான். இவற்றுக்குத்தான் திரையரங்க கேளிக்கை வரியின் வருவாய் கிடைத்துவந்தது. கிராமப்புற வளர்ச்சி பற்றிப் பேசிக்கொண்டு, பஞ்சாயத்துகளின் வருவாய் ஆதாரங்களை முடக்குவது உதட்டளவு அக்கறை அல்லாமல் வேறென்ன?

தமிழக முதல்வர் அரசாணை வெளியான பிறகு இதற்காக எல்லாருமே தங்கள் படத்துக்கு தமிழ்ப் பெயரை வைத்தார்கள் - சலுகை பெறுவதற்காக. ஆனால் பாடல்களும், வசனங்களும் ஆங்கிலம் கலந்து கிடந்தன. இத்தகைய படங்கள் தமிழுக்கும் தமிழர்தம் கலாசாரத்துக்கும் ஏற்படுத்திய இழப்புதான் அதிகமே தவிர, இதனால் தமிழுக்கு ஒரு பயனும் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லிவிட முடியும்.

ஒரு படத்துக்கான வரி விலக்கு என்பது அந்தப் படம் தேசிய ஒற்றுமை குறித்துப் பேசுவதாலோ அல்லது நம் வரலாற்றை வெகுஜன மக்களிடம் கொண்டுசேர்க்க உதவுகிறது என்பதாலோ அளிக்கப்படும் சலுகை. அதை அரசின் பாராட்டு என்று சொன்னாலும் மிகையில்லை. ஆனால் அத்தகைய பாராட்டு அந்தப் படம் வெளியானபிறகு, அது மக்களிடம் வரவேற்பைப் பெற்ற பிறகு அத்தகைய முடிவை அரசு மேற்கொள்வதாக இருக்க வேண்டும். அதுதான் சரியான முறையும் கூட.

அன்றைய காலம் தொட்டு அண்மைக்காலம் வரை அப்படியாகத்தான் வரிவிலக்குகள் அளிக்கப்பட்டன. கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன் போன்ற அன்றைய படங்களுக்கும், அண்மைக்காலங்களில் வெளியான கருத்தம்மா, பாரதியார், பெரியார் போன்ற படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டதை யாரும் குறை சொல்லவே முடியாது.

இதே வரிவிலக்கு, ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ரூ.160 கோடியில் தயாரிக்கப்படும் படங்களுக்கும்கூட, தமிழில் பெயர் இருக்கும் ஒரே காரணத்தால் கேளிக்கை வரிச் சலுகை என்பது இந்த வரிச் சலுகையை பொருளற்றதாக்கிவிடுகிறது.

கேளிக்கை வரி திரையரங்க நுழைவுக் கட்டணத்தில் 10 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 2,500 திரையரங்குகளில் ஒரு திரைப்படம் ரூ.200 கட்டணத்தில் வெளியாகுமேயானால், இதனால் கிடைக்கும் ஒருநாள், 5 காட்சிகள் வசூலில் மட்டும் ஏறக்குறைய 9 கோடி ரூபாய் கேளிக்கை வரியாக கிடைக்கும். இத்தகைய சாத்தியக்கூறுகளைப் பார்க்கும்போது, தமிழில் பெயர் இருப்பதாலேயே எல்லாப் படங்களுக்கும் கேளிக்கை வரி வழங்குவது என்பதால் அரசுக்கு என்ன லாபம்? என்ற கேள்வி எழுகிறது.

திரையரங்குகளில் கூட்டம் குறைகிறது என்பதால், கட்டணத்தை ஆளாளுக்கு ஒருவிதமாக உயர்த்தியபோது, தமிழக அரசு தலையிட்டு, திரையங்குகளில் உள்ள தொழில்நுட்பக் கருவிகள், வசதிகளை மையமாக வைத்து, மாநகரம், நகரம் இரு பகுதிகளிலும் உள்ள திரையரங்குகளை ஏ,பி, சி என தரம்பிரித்து அதற்கான கட்டணங்களையும் நிர்ணயித்தது. அது ஒரு நல்ல முடிவு என்று பொதுமக்களால் பாராட்டப்பட்டது. ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் முதல்வரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு முதலாக புதிய அரசாணையை அரசு பிறப்பித்தது. இதன்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் 75 விழுக்காட்டை திரையரங்குகள் உயர்த்திக் கொள்ளலாம். மொத்த இருக்கைகளில் 10 விழுக்காடு அளவுக்கு (முதலில் 20 விழுக்காடாக இருந்தது) குறைந்தபட்ச கட்டணத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தக் குறைந்தபட்ச கட்டணம் என்பது மாநகரங்களில் ரூ.10 ஆகவும், நகரங்களில் ரூ.5 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால் முதல் ஒரு வரிசை இருக்கைகள் மட்டுமே குறைந்தபட்ச கட்டணத்துக்காக ஒதுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

இத்துடன் விஷம்போல ஒரு சலுகையையும் தமிழக அரசு அறிவித்தது. முதல் இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகள் கூட்டத்துக்கு ஏற்ப கட்டணத்தை, வணிக வரி அதிகாரிகளின் அனுமதியுடன் உயர்த்தலாம் என்பதுதான் அது. தமிழ்நாட்டில் எத்தனை படம் ஒரு வாரம் முழுதாக ஓடுகிறது? ஆகவே, 2007 ஜனவரி முதலாக, உயர்த்தப்பட்ட நுழைவுக் கட்டணம் குறித்து "சி' படிவம் கொடுத்தால் போதும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால் திரையரங்குகளில் விருப்பம்போல கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். அதனால்தான் எந்திரன் படத்துக்கு வெளிப்படையாகவே ரூ.200, 300 என்று அறிவித்தார்கள்.

சரி, இப்படி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, கட்டணம் உயர்த்தப்பட்டதே இதற்கான வணிக வரி, வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில்தான் செலுத்தப்பட்டுள்ளதா என்றால் சந்தேகம்தான்.

ஒவ்வொரு திரையரங்கும் மாவட்ட வணிக வரித் துறையில் வாரம்தோறும் வசூல் அடிப்படையில் வணிக வரி செலுத்துகின்றன. ஆனால் வசூல் எவ்வளவு என்று தீர்மானிப்பவர்கள் திரையரங்க உரிமையாளர்கள்தான். இதில் அதிகாரிகள் ஆய்வு என்பது இல்லவே இல்லை என்று சொல்லலாம். கேளிக்கை வரியும் கிடையாது. வணிக வரியும் முறைப்படி வருவதில்லை. லாபம் சம்பாதித்துக் கொழிப்பவர்கள் தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும். இதற்கு பொதுமக்களின் நன்மைக்குக் கிடைக்க வேண்டிய வரிப்பணம் ஏப்பம் விடப்படுகிறது. நன்றாக இருக்கிறதே நியாயம்...

ஒரு படம் வெளியான பிறகு அதன் தரம், கதையின் மையம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும். திரைப்படத்துக்கான சலுகை அத்துறையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். நல்ல கருத்தாழமும், சமூக சிந்தனையும் கொண்ட திரைப்படங்களையும், குறைந்த பட்ஜெட்டில் திரைப்பட விழாக்களில் போட்டி போடும் அளவிலான படங்களையும் எடுக்க ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் அரசுக்கு வருவாய் கிடைப்பதும் தடைபடக்கூடாது

*******************************************************************************

*****************************
தினமினி ஆகிப்போன தினமணி!
*****************************

தினமணி என்பது சமூகத்தின் கண்ணாடி போல இருந்தது ஒரு காலம்… ஒரு பத்தாண்டு காலம் அப்படி இருந்திருக்கும். அதன் பிறகு… மணி, மினியாகி இப்போது மைக்ரோ லெவலுக்குப் போய்க்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் வந்திருக்கிறது.

எந்திரன் பற்றி எழுதிவிட்டதால் வந்த கோபமா இது? என்ற ரெடிமேட் கேள்வியை சிலர் உடனே வைக்கக் கூடும் (ஆனால் முழுவதும் படித்த பிறகு அதைக் கேளுங்கள்). அதுவும் ஒரு காரணம்தான்… உடனடிக் காரணம். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதற்கும் முன்பே, செம்மொழி மாநாட்டின்போது தினமணியின் பச்சை சந்தர்ப்பவாதம் புரிந்துவிட்டதால், அந்தப் பத்திரிகை மீதிருந்த மதிப்பே பலருக்கும் போய்விட்டது. பணியாற்றும் சிலர்தான் இதற்குக் காரணம் எனும்போது பாரம்பரியமிக்க ஒரு பத்திரிகையை மொத்தமாய் நொந்துகொள்வது நியாயமில்லைதான். ஆனால் வேறு வழியில்லை.

செம்மொழி மாநாடு என முதல்வர் கருணாநிதி அறிவித்தபோது, இதே தினமணி ஆயிரம் ஆட்சேபங்களுடன் தலையங்கமாய் தீட்டித் தள்ளியது. ஈழத் தமிழர்களுக்காக போலிக் கண்ணீர் வடித்தது.

ஆனால் செம்மொழி மாநாட்டு மலர் தயாரிப்பு பொறுப்புடன் வேறு சில ‘பணிகளையும்’ மொத்தமாய் தினமணிக்கு தந்து வாயடைத்தார் முதல்வர். அன்று முதல் செம்மொழி மாநாட்டுக்கு அறிவுரை சொல்வது போல பாராட்டி தொடர் தலையங்கங்கள் தீட்டியவர்கள்தான், இப்போது எந்திரன் வெளியாகும் தருணம் குய்யோ முறையோ என கூக்குரலிடுகிறார்கள். எந்திரன் ஏகாதிபத்தியம் என ஒப்பாரி வைக்கிறார்கள். இதை பிளாக்கில் காப்பி பேஸ்ட் பண்ணும் கைப்புள்ளைகள் தொல்லை வேறு தாங்கவில்லை!

இவர்கள் குற்றச்சாட்டுதான் என்ன?

இத்தனை பிரமாண்டமாய் ஒரு படம், உலகின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒருங்கிணைகிறார்கள்… அதில் நாயகனாய் ரஜினி! – இதையே இவர்களால் தாங்க முடியவில்லை.

இவர்களைப் பொறுத்தவரை, இந்த மாதிரி ‘ஹைடெக்’ பாத்திரங்களில் நடிக்க வேறு சில நடிகர்களை வரித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் வாயுத் தொல்லையில் அவதிப்படுவதுபோல் பாவம் காட்டினாலும் அது ஆஹா ஓஹோ ரகம்தான். இந்த பிரமாண்ட படத்தில், அதுவும் விஞ்ஞானியாக, ‘ஆட்டோக்காரர், படிக்காதவன், கூலி’ வேடம் போடும் ரஜினி நடித்திருப்பதே மகா எரிச்சலாகத்தானே இருக்கும்!

“ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு படைக்கிறது எந்திரன்…” என்பது தினமணியின் ஆதங்கம்.

எது ஏகாதிபத்தியம்?

சினிமா என்பது சோஷலிஸம் அல்ல… அது திறமைசாலிகள் ஏகாதிபத்தியம் செலுத்தும் இடம்தான் என்ற அடிப்படை உண்மை கூட தெரியாத கைப்புள்ளைகள் மாதிரி தினமணி கட்டுரை / தலையங்கம் எழுதுவதை நினைக்கும்போதே வேடிக்கையாக உள்ளது.

சினிமாவில் ரிசர்வேஷன் கிடையாது. திறமையுள்ளவன் ஜெயிப்பான். திறமையையும் பிரமாண்டத்தையும் சரியாக கூட்டு சேர்த்து, புத்திசாலித்தனமாக மார்க்கெட் செய்யத் தெரிந்தவன் நிலைப்பான். அதை செய்யத் தெரியாதவன் கலையுலகத்தில் கால் வைக்கக் கூடத் தகுதியில்லாதவனே! முடிந்தால் அப்படிப்பட்ட யாரையாவது வைத்து தினமணிக்காரர்களும் அவர்களை காப்பி பேஸ்ட் செய்யும் அதிமேதாவிகளும் படம் எடுத்துப் பார்க்கட்டும்.

கொஞ்சம் விட்டால், தங்களை விட அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களையும் குறை சொல்வார்கள் போலிருக்கிறதே. உங்களால் முடிந்தால் ஜெயித்துக் காட்டுங்கள், சட்டம் அனுமதிக்கிற அத்தனை வழிகளையும் பயன்படுத்தி. அதுதானே இந்த நாட்டின் அரசியல் – பொருளாதார கட்டமைப்பாக இருக்கிறது? முடிந்தால் கட்டமைப்பை மாற்றிவிட்டு, இப்படிக் கட்டுரைகள் மூலம் புத்திமதி சொல்லுங்கள்.

சிவாஜி இருக்கும் வரை நடிப்பில் அவர்தான் ஏகாதிபத்தியம் செலுத்தினார். எம்ஜிஆர் இருக்கும் வரை நடிப்பு மட்டுமல்ல, புகழிலும் செல்வாக்கிலும் கூட அவரே ஏகாதிபத்தியம் செலுத்தினார். இவர்கள் தங்களின் திறமையையும் புகழையும் அனைவருக்கும் சமமாகப் பிரித்து தர வேண்டும் என்று சொல்லியிருக்க முடியுமா!

உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம் எடுத்த காலகட்டத்தில், அதுதான் எந்திரன் மாதிரி. அன்றைக்கு திமுக அரசு முற்று முழுதாக எம்ஜிஆருக்கு எதிராக இருந்தது. ஆனாலும் தமிழகம் முழுவதும் அந்தப் படமே ஆதிக்கம் செலுத்தி வெள்ளி விழா கண்டது வரலாறு.

ஆனால் அந்தப் படத்தை குறை சொல்லவில்லை தினமணி. ஏன்? அன்று தினந்தந்தியுடன் பிணக்கிலிருந்த எம்ஜிஆர், தினமணிக்கு முழுப்பக்க அளவில் விளம்பரமாய் கொடுத்துத் தள்ளினார். தினமணி தன் ஆயுளில் பெற்ற முதலும் கடைசியுமான முழுபக்க சினிமா விளம்பரம் உலகம் சுற்றும் வாலிபன்தான். அன்றைக்கு எதுவுமே ஏகாதிபத்தியமாகத் தெரியவில்லை தினமணிக்கு. பாவம், ஏகாதிபத்தியக் கட்டுரை எழுதிய மேதாவிகளுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. தினமணி லைப்ரரிக்கு ஒரு நடை போய் வந்தாவது எழுதித் தொலைத்திருக்கலாம்!

ரூ 160 கோடி செலவில் ஒரு திரைப்படம் எடுக்கிறார்கள். ஆபாசம், வன்முறை, அறுவருப்பு ஏதுமின்றி, அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு கலைப் படைப்பைத்தான் அவர்கள் தந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை, போட்டிகளும், மாற்றுப் பொழுது போக்குகளும் நிறைந்த இந்த உலகில் அதற்குரிய முனைப்பும் வேகமும் கொண்ட முயற்சிகளோடுதானே கொண்டு போக முடியும்?

ஒரு வேளை மார்க்கெட்டிங் சரியில்லாமல், உரிய விளம்பரமும் இல்லாமல் இதே படம் பெட்டியில் சுருண்டிருந்தால், ‘படம் எடுக்கத் தெரிந்தவர்களுக்கு அதை உரிய முறையில் மக்களிடம் சேர்க்கத் தெரியவில்லையே’ என வெண்ணெய் வெட்டி நியாயம் பேசியிருப்பார்கள் இதே கட்டுரையாளர்கள்!

இலங்கைக்கு போகவே கூடாது என்று தமிழுணர்வாளர்கள் கூப்பாடு போட்டுக் கொண்டும் கொடிபிடித்துக் கொண்டுமிருக்கிற காலகட்டத்தில், கொழும்புவுக்கு விமான சேவையே ஆரம்பித்துவிட்ட கலாநிதிமாறனின் சன் குழுமத்தின் மீது நமக்கு பெரிய அபிப்பிராயமில்லைதான். இப்போதும் இந்த கட்டுரையை ரஜினி என்ற மனிதர் / யாரோடும் ஒப்பிட முடியாத அரிய கலைஞர் மீது வைத்துள்ள அபிமானத்துக்காகவே எழுதுகிறோம்.

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், சன் குழுமம் இன்று நாட்டின் பெரும் ஊடகக் குழுமம் ஆகிவிட்டது. இதை யாராலாவது தடுக்க முடியுமா… அப்படித் தடுக்க ஏதாவது சட்டவிரோதமாக அவர்கள் செய்திருக்கிறார்களா? சட்டப்படி இந்த குழுமத்துக்கு எதிராக எதையாவது செய்ய முடியுமா? அப்படி ஏதேனும் ஓட்டைகள் இருந்தால், அதை சட்டப்பூர்வமாகவே செய்யலாமே… எதற்கு வெட்டிப் புலம்பல் கட்டுரை?

அரசின் ஆசியோடு சன் குழுமம் எந்திரனை சந்தைப்படுத்துகிறது என்கிறார்கள். இதற்கு முன் ரஜினியின் சிவாஜி படத்தை ஏவிஎம்தான் எடுத்தது. படத்தின் ப்ரமோஷனுக்காக அந்த நிறுவனம் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஆனால் சிவாஜிக்கு தானாகவே வந்தது பப்ளிசிட்டி. சொல்லப் போனால், எந்திரனை விட அதிகமான பப்ளிசிட்டி சிவாஜிக்குதான் கிடைத்தது. ஒரு பிரபல இணையதளம் சிவாஜி படம் ஆரம்பித்த நாளிலிருந்து அந்தப் படம் குறித்து 700 செய்திகளை வெளியிட்டுள்ளது. காரணம் ரஜினி. அரசாங்க ஆதரவல்ல!

ஆனால் எந்திரனுக்கு அப்படி வரவில்லை. காரணம் சன் குழும படம் என்பதால். வேறு வழியில்லை… தினத்தந்தி உள்ளிட்ட பல நாளிதழ்கள் எந்திரன் செய்தி வெளிவராமல் கவனத்துடன் பார்த்துக் கொண்டது நினைவில்லையா தினமணிக்கு?

அப்படி ஒரு சூழலில் சன் குழுமம், தன்னிடமுள்ள மீடியா பலத்தைக் காட்டியதில் தவறென்ன? தினமணிக்கு ஏன் எரிகிறது? இதில் என்ன அரசு சலுகையைக் கண்டார்கள்? தியேட்டர் கொளுத்தப்பட வேண்டும், பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும். அப்போதுதான் அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்வோம் என்கிறதா தினமணி?

டிக்கெட் விலை தாறுமாறாக விற்கப்படுகிறது என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ரஜினியின் படங்களை தொடர்ந்து முதல் நாள் பார்க்கும் ஆர்வத்துடன் செல்லும் ரசிகர்களுக்குத் தெரியும், அவர் படத்துக்கு டிக்கெட் கட்டணம் எந்த அளவுக்கு உயரும் என்பது.

அரசின் கட்டுப்பாடு இருந்த காலத்தில், ரஜினியின் படங்களுக்கு 40 – 50 நாட்கள் வரை பிளாக்கில் டிக்கெட் விற்கப்பட்டது தினமணிக்கு தெரியுமோ தெரியாதோ.. எண்பதுகளிலேயே ரூ 300 முதல் 500 வரை டிக்கெட் வி்ற்கப்பட்டது ரஜினி படங்களுக்குத்தான். மற்றவர்களின் படங்களுக்கான டிக்கெட்டுகளை கூவிக்கூவி விற்க வேண்டிய நிலைதான் அன்றுமுதல் இன்றுவரை.

ரஜினியின் படம் வெளியாகிறது என்றால் நல்லபடியாக டிக்கெட் விற்கும் தியேட்டர்காரனிலிருந்து கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பவன் வரை, முறுக்கு, சோடா விற்கும் கடைகாரனிலிருந்து மல்டிப்ளெக்ஸ் பீட்ஸா கடைக்காரன் வரை அத்தனை பேருக்கும் அமோக பிஸினஸ்தான். மக்கள் கொள்ளையடிக்கப் படுகிறார்களே என்று கேட்கலாம். எப்போதாவது ஒரு முறை சந்தோஷமாக இதை மக்களே அனுமதிக்கிறார்கள். விருப்பமில்லாத யாரையும் கட்டாயப்படுத்தி படம் பார்க்கவோ, அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கச் சொல்லியோ யாரும் கட்டாயப்படுத்தவில்லையே.

சரி, இந்தியாவில், அட தமிழ்நாட்டில்தான் இப்படி என்று புலம்புகிறீர்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் 40 டாலர் வரை கொடுத்துப் படம் பார்க்கிறார்கள். அவர்களை யாராவது கூப்பிட்டு வைத்து பணத்தைப் பிடுங்கினார்களா… ஆக தினமணி கூறும் குற்றச்சாட்டு மொத்தமும் எங்கே வந்து நிற்கும் தெரியுமா… ரசிகனிடம்தான்!

ஒரு ரசிகனை, அவனுக்குப் பிடித்த படம், பொழுதுபோக்கை அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது என்ற கருத்தைத்தான் தினமணி தூக்கிப் பிடிக்கிறது. பிக்காசோவின் ஓவியம் புரியாவிட்டாலும் கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கலாம். தப்பில்லை. காரணம் அது கலைப்படைப்பு என்று கூறும் இந்த மாதிரி அறிவுஜீவிகள், சாதாரணர்களுக்கான சினிமாவுக்கு எதிராக இவ்வளவு மல்லுக்கட்டுவது ஏன்?

தசாவதாரம் என்றொரு படம் வெளியானது தினமணிக்குத் தெரியுமா… சிவாஜியின் வெற்றியைப் பார்த்த ஜூரத்தில், அந்தப் படத்தை பிரமாண்டமாய்க் காட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜாக்கிசானை வரவழைத்ததிலிருந்து என்னவெல்லாம் செய்தார் என்பதாவது இந்த அறிவுஜீவிகளுக்கு நினைவிருக்கிறதா?

சினிமாவை நோக்கி மக்களை ஈர்க்கும் அந்த உத்தியில் எந்த சட்ட மீறலும், நியாய மீறலும் இல்லை எனும்போது, எந்திரனுக்கு மட்டும் ஏன் இப்படி கட்டுரைகள் எழுதுகிறார்கள்?

இதே தினமணி, கடந்த இரு தினங்களாக செய்து வரும் ஒரு விஷமப் பிரச்சாரத்தை என்னவென்பது…

எந்திரன் படத்தை ஏதோ ஒரு இணையத்தில் வெளியிட்டுள்ளார்களாம். இவர்கள் வேலைமெனக்கெட்டு அந்த தளத்தின் முகவரியை கொட்டை எழுத்துக்களில், அதுவும் தனி நிறத்தில் லிங்காக கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் பத்திரிகை தர்மத்தில் கொள்ளியை வைக்க.

உண்மையான அக்கறை கொண்டவர்களென்றால், அந்த லிங்கை தயாரிப்பாளர்களுக்கல்லவா அனுப்பியிருக்க வேண்டும்? மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் பெயரைக் கூட வெளியிடக் கூடாது என்பது பத்திரிகை மரபு. அவள் ஏழையா, பணக்காரியா என்று பார்ப்பதில்லை இந்த விஷயத்தில்.

திருட்டு வீடியோவாக ஒரு படம் வெளியாகும்போது கிட்டத்தட்ட மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் நிலைதான் அந்தப் படத்துக்கும். தினமணி இப்போது செய்திருப்பது, மானபங்கப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் துணியை மீண்டும் உருவிப்பார்க்கும் செயலே. சமூக அக்கறையுமில்லை, வேறு ஒரு மண்ணுமில்லை.

இவ்வளவெல்லாம் செய்த பிறகும் தினமணியின் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை. இன்றைக்கு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார்கள், எந்திரனுக்கு வரிவிலக்கு தந்திருக்கக் கூடாது என்று. காரணம், அது பெரிய பட்ஜெட் படமாம். வசூலைக் குவித்துவிட்டதாம்.

தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்பது விதி. அந்த விதிமுறையை மீறாமல் வந்திருக்கிற படம் எந்திரன். அழகான, புத்தம் புதிய, சுத்தமான ஒரு சொல்லை தமிழுக்குத் தந்திருக்கிறது இந்தப் படம். தமிழை வளர்க்கத்தானே கருணாநிதி அரசு இந்த சலுகையை அறிவித்தது… அதை சரியாகத்தானே எந்திரன் செய்திருக்கிறது!

ஒருவேளை குவார்ட்டர் கட்டிங், ராஸ்கல், ஓடுகாலி (இதெல்லாம் சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ள தலைப்புகள் சாமி!) போன்ற தூய தமிழ்ப் பெயர் கொண்ட படங்களுக்குத்தான் வரிவிலக்கு தரலாம் என்கிறார்களோ… அதிலும் பாருங்கள் இத்தனை நாட்களாக இவர்களுக்கு இந்த அக்கறையே இல்லை. எந்திரன் வெளியான நேரம் பார்த்து கட்டுரை வெளியிட்டு, ஓநாய் அழுத கதையை நமக்கு நினைவுபடுத்துகிறார்கள்!

படத்தைப் பாருங்கள். படைப்பில் நேர்மையும் உழைப்பும் இருக்கிறதா என்று கவனியுங்கள். அந்தப் படைப்புக்கு சொந்தக்காரர்களால் இந்த சமூகத்துக்கு பாதிப்பிருக்கிறதா.. பெருமை சேர்கிறதா என்று பாருங்கள். இவையெல்லாம் சரியாக இருந்தால் பாராட்டிவிட்டுப் போவதுதான் ஒரு பத்திரிகையாளனுக்கு அழகு. அதைவிட்டுவிட்டு, உள்ளுக்குள் இருக்கும் அழுக்கை யாருக்கும் கெடுதல் நினைக்காத ரஜினி போன்றவர்கள் மீது கொட்டக் கூடாது. இதே கோடம்பாக்கத்தில் வேண்டாத விஷப்பூச்சிகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை நசுக்கப் பாருங்கள்!

நாடே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பை, அந்தப் படம் தயாரான மாநிலத்துக்காரன் பழிக்க நினைப்பது எத்தனை பெரிய மூடத்தனம்!

கிரானிக்கிளின் கிறுக்குத்தனம்!

தினமணியின் கருத்தைக் கூட ஒரு கட்டுரை.. கருத்துக்கு மறு கருத்து என்ற வகையில் எதிர் கொள்ளலாம், வாதிடலாம். ஆனால் டெக்கன் கிரானிக்கிள் என்ற அரைவேக்காட்டு ஆங்கில நாளிதழ் செய்திருக்கும் சொதப்பல், மகா தமாஷ்.

எந்திரன் வெளியான மூன்றாவது நாள், அதாவது ஞாயிற்றுக்கிழமை, கோயம்பேடு ரோகிணியில் 3 திரையரங்குகளில் எடுத்துவிட்டார்கள் என்று செய்தி வெளியிட்டது, யாரோ ஒரு மூன்றாம்தர தரகரை மேற்கோள்காட்டி!

எந்திரன் விளம்பரங்களில் ரோகிணி காம்ப்ளக்ஸ் என்றுதான் போட்டுள்ளது. என்னென்ன திரையரங்குகள் என்று வெளியிடப்படவில்லை. ஆனால் அபிராமியில் பாருங்கள்… திரையரங்குகள் பெயர் தெளிவாக இருக்கும். பிவிஆரில் 5 ஸ்க்ரீன்களின் பெயர்களும் இருக்கும். ஆனால் ரோகிணி என்ற ஒரு தியேட்டருக்கு பிரிண்ட் எடுத்து 5 தியேட்டர்களில் ஓட்டியிருக்கிறார்கள். அதுவே குற்றம்தான். இதில் மூன்று திரையரங்குகளில் படத்தை மூன்றாம் நாள் தூக்கிவிட்டதாக செய்தி. ஞாயிற்றுக்கிழமை எந்திரனுக்கு டிக்கெட் கிடைக்காமல், புறநகர்களை நோக்கிப் படையெடுத்த ரசிகர்களின் எண்ணிக்கையாவது தெரியுமா இந்த கிறுக்கர்களுக்கு!

இதையெல்லாம் விட முக்கியம், இந்த திரையரங்கம் பன்னீர் செல்வத்துக்கு சொந்தமானது. எந்தப் பன்னீர்செல்வம் தெரியுமா… குசேலன் படத்தை ஓடவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, இதே சன் டிவியின் துணையோடு அழிச்சாட்டியம் செய்த அதே பன்னீர் செல்வம். இவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

குறைந்தபட்சம் இதையெல்லாம் கூட யோசிக்காமல், அதை ஒரு பெரிய செய்தியாக போட்டிருந்தார்கள் அந்த கிரானிக்கிள் கிறுக்கர்கள். ரஜினி பிறந்த நாள், எந்திரன் ரிலீஸ் நாளுக்கெல்லாம், இணைய தளங்களிலிருந்து பக்கம் பக்கமாக சுட்டுப்போட்டவர்களுக்கு, ஆராய்ந்து செய்தி எழுதத் தெரியாதுதான். ஆனால் ஆங்கிலப் பத்திரிகை என்பதால் எதை எழுதினாலும் அம்பலத்தில் ஏறுகிறது. என்ன செய்வது! முதலில் கிராமர் மிஸ்டேக் இல்லாமல் செய்தி போடுவது எப்படி என்று கற்றுக் கொண்டு, இந்த மாதிரி ஸ்கூப்களுக்கு வரட்டும் இந்த அதிமேதாவிகள்!

இந்த இரண்டு பத்திரிகைகளும் ஒன்றே ஒன்றைத்தான் எந்திரன் விஷயத்தில் சாதித்தன… அது எந்திரனை குறை சொல்ல முடியவில்லையே என்ற காய்ச்சலில் கிடந்த ரஜினி விமர்சகர்களைச் சொறிந்துகொடுத்த அல்ப சந்தோஷம் மட்டும்தான்!

-வினோ

என்வழி.காம்
***************************************************************************




*************************************
தினமணி படிப்பது மனநலத்துக்குக் கேடு!
*************************************


தினமினி ஆகிப்போன தினமணி’ என்ற தலைப்பில் நேற்று வெளியான கட்டுரையைப் படித்த சில நண்பர்கள், ‘தினமணிக்கும் சன் பிக்சர்ஸுக்கும்தான் பிரச்சினை போலிருக்கிறது. அவர்கள் ரஜினியை விமர்சிக்கவில்லை. எதற்காக தினமணியை இந்த அளவு கடுமையாக நாம் விமர்சிக்க வேண்டும்?’ என்று மெயில்கள் அனுப்பியிருந்தனர்.

அவர்கள் அந்த நாளிதழை சமீப காலமாக தொடர்ந்து படிக்கவில்லை என்பது தெளிவாகப் புரிந்து, மீண்டும் படிக்கச் சொன்னேன். படித்துவிட்டு, சில மணிநேரம் கழித்து மீண்டும் பேசினார்கள். அப்போது தினமணிக்கு அவர்கள் பண்ண ‘அர்ச்சனை’யின் 1 சதவீதத்தைக் கூட இப்போது வெளியிட முடியாது. அத்தனை கடுமையாகப் பேசி ஓய்ந்தார்கள்.

உண்மையில் ஒரு மனநிலை பிறழ்ந்தவனின் தன்மையுடன்தான் ரஜினி மற்றும் எந்திரன் குறித்த தினமணியின் விமர்சனங்கள் அமைந்துள்ளன.

‘ரஜினி படம் பார்ப்பது மன நலத்துக்குக் கேடு’ என்ற தலைப்பில் அவர்கள் நேற்று வெளியிட்ட கார்ட்டூன், ரஜினி என்ற கலைஞன் / தனி மனிதன் மீது அவர்களின் காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும் எந்த அளவு மிதமிஞ்சிப் போய் உள்ளது என்பதைக் காட்டும் ஒரு குறியீடு.

எந்திரன் வெளியான தினத்திலிருந்தே தினமணி மற்றும் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் அந்தப் படத்துக்கு எதிரான கொடூரமான விமர்சனங்களில் இறங்கிவிட்டதை, நடுநிலையாளர்கள் அறிவார்கள்.

எக்ஸ்பிரஸ் நாளிதழில் நேற்று அதன் மூத்த நிருபர் ஒருவர் எழுதியிருந்த கட்டுரைக்கு தலைப்பு: “நான் ஏன் எந்திரன் பார்க்கவில்லை?” ஆனால் அவர் எந்திரனைப் பார்க்காததற்கான காரணங்களை விட்டுவிட்டு, கிட்டத்தட்ட எந்திரனுக்கு விமர்சனமே எழுதியிருந்தார். அதாவது படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம்…. வெளங்கீரும்!

ஆராய்ந்தறிதல் என்பது ஒவ்வொரு செய்தியாளனுக்கும் இருக்க வேண்டிய அடிப்படை குணம். அது தினமணியில் பணியாற்றுபவர்களுக்கு இருக்கிறதா என்ற சந்தேகத்தைக் எழுப்பியுள்ளது அவர்களின் நேற்றைய கார்ட்டூன்.

இந்த கார்ட்டூனுக்கு அடிப்படை, ஒரு செய்தி.

‘எந்திரன் படம் பார்க்க மனைவி வர மறுக்க, அதன் தொடர்ச்சியாக எழுந்த சண்டையின் முடிவில் கணவன் தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சித்தான்’ என்று ஒரு செய்தி நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது. ஆனால் இந்தச் செய்தியை காவல் துறை தரவில்லை. காற்றுவழியாக வந்த ஒரு செய்தி இது. சில இணையதளங்கள் கண்காது மூக்கு வைத்து எந்திரன் தொடர்பான செய்தியாக்கினார்கள். அதை அடிப்படையாக வைத்து தினமணி கார்ட்டூன் வரைந்துள்ளது, ரஜினி படம் பார்ப்பது மனநலத்துக்குக் கேடு என்று!

உண்மையில் அந்த இளைஞன் தற்கொலைக்கு முயன்றது எந்திரனுக்காகவா… இல்லை. கோவை சரவணம்பட்டி போலீசாரிடம் நாம் விசாரித்ததில், “கணவன் மனைவிக்கிடையே தகராறு. மனைவி மதிக்காமல் கேவலமாகப் பேசியதில் அந்த இளைஞன் தூக்குமாட்டிக் கொள்ளப் போய்விட்டான். ஆனால் எந்திரன் படத்துக்குப் போகலாம் என்பதில்தான் பிரச்சினை துவங்கியதாகச் சொல்கிறார்கள்…,” என்றனர்.

ஆனால் எந்திரன் படத்துக்குப் போக முடியவில்லையே என்பதால் தற்கொலை செய்ய முயன்றார் என்று இங்கே செய்தி. அப்போதுதானே படிப்பார்கள்!

காக்காய் உட்காரப் பணம்பழம் விழுந்தமாதிரி, பெரிய நிகழ்வுக்கு ஒரு சாதாரணமான சமாச்சாரம் உடனடிக் காரணமாகிவிடுவதுண்டு. ஆனால் பிரச்சினை அந்த தீவிர நிலைக்கு வர வேறு பல காரணங்கள் நிச்சயம் இருக்கும். மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வகுப்புக்கு வரும் ஆசிரியர் மாணவர்கள் மீது பாய்ந்து பிறாண்டுவதில்லையா?

இதே கோவையில், பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவனை (அவர் ஒரு ஆசிரியர்), ‘எப்போதும் இந்த வெட்டிப் பேப்பரையே கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே’ என்று மனைவி நக்கலாக இடிக்க, உடனே கடுமையான சண்டை. விரக்தியில் அந்த கணவன் சாணிப் பவுடரை எடுத்துக் கரைத்துக் குடித்துவிட்டார். பயந்துபோன மனைவி இரு குழந்தைகளுடன் கிணற்றில் விழ, அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை கொண்டுவந்தார்கள். பிழைத்து எழுந்தவர்களிடம் ‘என்னய்யா தகராறு?’ என ஆத்துப்பாலம் போலீசார் விசாரிக்க, ‘பேப்பர் படித்ததால் வந்த தகராறு’ என்றார்கள். ஆங்… முக்கியமானது, அந்த கணவன் படித்தது தினமணி பேப்பர்தான். அன்றைக்கு, ‘தினமணி படித்தால் மனநலத்துக்கு பாதிப்பு, அதைத் தடை பண்ண வேண்டும்’ என யாராவது எழுதியிருந்தால் ஒப்புக் கொள்வார்களா?

அட அவ்வளவு ஏன்… சில ஆண்டுகளுக்கு இதே தினமணியில் பணியாற்றிய ஒரு செய்தியாளர், ‘எனது மரணத்துக்கு தினமணி ஆசிரியர் மற்றும் நிர்வாகம் எனக்குச் செய்த கொடுமைதான் காரணம்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு நங்கநல்லூரில் தூக்கு மாட்டிக் கொண்டு செத்தே போனான். என்ன செய்தது தினமணி? ‘அடடா, தினமணி என்பதே சைக்கோ சமாச்சாரமாயிருக்கிறதே’ என்று பேப்பரை நிறுத்திவிட்டார்களா… ஓடிப் போய் ஜெயலலிதா காலில் கையில் விழுந்து போலீஸின் கைகளைக் கட்டிப் போடவில்லையா… பத்திரிகை அமைப்புகளிடமெல்லாம் சமரசம் பேசிக் கொண்டு நிற்கவில்லையா…

இதுதான் தினமணியின் உண்மையான முகம். வந்துவிட்டார்கள் உபதேசம் சொல்ல!

பரபரப்பாக ஒரு விஷயம் நடந்தால், அதனோடு ஒப்புமைப்படுத்தி சில செய்திகளை வெளியிடுவது ஆதித்தனார் குழும பத்திரிகைகள் ஏற்படுத்திய வழக்கம். இன்று அதை எல்லோருமே கடைப்பிடிக்கிறார்கள், தினமணி உள்பட. எண்பதுகளில் மணிவண்ணன் வெளியிட்ட ‘நூறாவது நாள்’ படம் பார்த்துவிட்டுத்தான் நான் 14 கொலைகளைச் செய்து, உடல்களை வீட்டுக்குள் புதைத்தேன் என்று ஜெயப்பிரகாஷ் சொன்னதாக தினத்தந்தியும், இதே தினமணியும் செய்தி வெளியிட்டன. அப்படியென்றால் சினிமா தொழிலையே முடக்கியிருக்க வேண்டுமே!

வாய்வழித் தகவலாகப் பரவும் வெற்றுப் பரபரப்பை மையமாக வைத்து, ஒரு சிறந்த கலைஞனையும் அவரது படத்தையும் தூற்றுவது எத்தனை பெரிய முட்டாள்தனம்?

அந்த முட்டாள்தனத்தைத்தான் தினமணி கடந்த 10 தினங்களாகச் செய்து வருகிறது. இந்த பத்து தினங்களில் ரஜினி மற்றும் அவரது எந்திரனுக்கு எதிராக மூன்று செய்திகள், இரண்டு தலையங்கங்கள், ஒரு கட்டுரை, 5 கார்ட்டூன்களை வரைந்து தள்ளியிருக்கிறது தினமணி.

ரஜினி படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிவிட்டதையும் குறை கூறி கார்ட்டூன். ரஜினி படம் பார்க்கப்போய் மொட்டையடிக்கப்பட்டதாய் ஒரு கார்ட்டூன்… தினமணி ஆசிரியர் குழுவுக்கு அல்லது சம்பந்தப்பட்ட கார்ட்டூனிஸ்டுக்கு மூளை மழுங்கிப் போய்விட்டதா… இத்தனை திரையரங்குகளில் போட்டே தீர வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லையே. இந்தப் படத்தை வந்து பாருங்கள் என்று யாரையும் கையைப் பிடித்து இழுக்கவில்லை அல்லது பாக்கெட்டில் கைவிட்டு பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு. பாருங்கள் பாருங்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். விருப்பப்பட்டோரெல்லாம் வாங்கிச்சென்று திரையிடுகிறார்கள். இதில் இவர்களுக்கு ஏன் எரிகிறது.

அடுத்து திருட்டுவிசிடி விற்கிற நாதாரியை ஆதரித்து ஒரு கார்ட்டூன். ஹ்ம்ம்… ரஜினி மீதான வயிற்றெரிச்சல் திருட்டு விசிடி எனும் குற்றத்தைக் கூட ஆதரிக்க வைத்துள்ளது தினமணியை. குற்றத்தை ஆதரிப்பவனும் குற்றவாளிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரஜினி படம் பார்த்தால் மனநலத்துக்குக் கேடா… அடப்பாவிகளா… சினிமாவிலும் நிஜத்திலும் சைக்கோத்தனமாகவே பேசித்திரியும் சிலரது படங்களில் ஒரு காட்சியைக் கூட குடும்பத்துடன் பார்க்கக் கூட முடியாதே… அந்தப் படங்களை என்ன செய்வீர்கள்? தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவீர்களா… எம்ஜிஆர் படங்களுக்குப் பிறகு, ரஜினியின் படங்களைத்தான் குடும்பத்துடன் தைரியமாக அமர்ந்து பார்க்க முடியும் என்பது சின்ன குழந்தைக்குக் கூட தெரிந்த உண்மையாயிற்றே. இந்த மனிதர் ஒருவர்தானே நாளைய தலைமுறை கூட நம்மை குறை சொல்லக் கூடாது என்ற கவனத்துடன் காட்சிகளை அமைக்கச் சொல்பவர் (முடிந்தால் அவரை வைத்து இயக்கிய இயக்குநர்களைக் கேட்டுப் பாருங்கள்). இந்த உண்மை தினமணிக்குத் தெரியவில்லையா?

தினமணியின் இந்த திடீர் மிரட்சியை, தமிழ்ப்படம் ஒன்று சர்வதேச சாதனைகள் செய்து வருவதைச் சகித்துக் கொள்ள முடியாத, ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பொறாமைக்காரனின் செயல் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியெனில் தினமணியை தடை பண்ணச் சொல்லி குரல் எழுப்பலாமா?

-வினோ
***************************************************************************


************************************************************
தினமணி, டெக்கன் கிரானிக்கிளுக்கு நோட்டீஸ் அனுப்பியது சன்!!
************************************************************

தொடர்ந்து எந்திரன் படம் குறித்த தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி, தினமணி மற்றும் டெக்கன் கிரானிக்கிள் நாளிதழ்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்ஸர்ஸ்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எந்திரன் படம் தொடர்பான செய்திகளை வெளியிடக் கோரியோ, புகைப்படங்களை வெளியிடுமாறோ அல்லது சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்றோ எந்த பத்திரிகைகளுக்கும் சன் குழுமம் கோரிக்கை விடுக்கவில்லை.

எந்திரன் தொடர்பான அனைத்துச் செய்திகளும் படங்களும் சன் குழும பத்திரிகைகள் அல்லது அவர்களின் அனுமதி பெற்ற தளங்களிலிருந்தே அனைவராலும் எடுத்தாளப்பட்டு வந்தன. சம்பந்தப்பட்ட இரு நாளிதழ்களும் கூட இதே வேலையைத்தான் செய்து வந்தனர்.

ஆனால் படம் வெளியான பிறகு, அந்தப் படத்தின் உள்ளடக்கத்தை விமர்சிக்காமல், படம் குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தப் பத்திரிகைகள் முனைப்பு காட்டின.

எந்திரன் ஏகாதிபத்தியம் என்றும், எந்திரன் படத்துக்கு கூட்டமில்லை என்கிற ரீதியிலும் இந்த இரு பத்திரிகைகளும் எழுதின.

உண்மையில் சென்னை நகரில் 42 அரங்குகளில் திரையிடப்பட்டுள்ள எந்திரனைக் காண இப்போதும் கூட்டத்துக்குக் குறைவில்லை. சத்யம், அபிராமி, எஸ்கேப், ஐநாக்ஸ் போன்ற அரங்குகளில் இப்போதும் டிக்கெட் கிடைப்பது கடினமான ஒன்றாகவே உள்ளது. ஆனால் டெக்கான் கிரானிக்கிள் நாளிதழ், படம் வெளியான மூன்றாவது நாளே (அதாவது ஞாயிறு!) கூட்டம் குறைந்தது என்றும், திரையரங்குகளில் காட்சிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகவும் பொய்ச் செய்தி வெளியிட்டது.

தினமணியோ, இன்னொரு படி மேலே போய் திரையுலகையே எந்திரன் ஆக்கிரமித்துவிட்டதாக வெறும் வயிற்றெரிச்சல் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. “இதில் அவர்கள் தெரிவித்திருந்த எந்த கருத்துமே திரையுலக நன்மைக்காக கூறப்பட்டதில்லை, சொந்த வெறுப்பை உமிழும் நோக்கிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது,” என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தினமணி மற்றும் டெக்கன் கிரானிக்கிள் நாளிதழ்களுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சன் பிக்சர்ஸ். குறிப்பிட்ட நாளிதழ்கள் வெளியிட்ட எந்திரன் தொடர்பான செய்திகள் பொய்யே என்றும், இந்தச் செய்திகள் மற்றும் வரம்பு மீறிய தாக்குதல் கட்டுரைக்கு உரிய மறுப்பு வெளியிட்டு, மன்னிப்பு கோராவிட்டால் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, November 3, 2010

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தின் இன்றைய நிலைமை. நன்றி தினமணி தலையங்கம்

02 Nov 2010 07:23,

(02 Nov 03:19 p.m.) ஓர் அரசின் அடிப்படைக் கடமை மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது என்பது, போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதும், தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வதும் மட்டுமல்ல, சராசரிக் குடிமகனின் அன்றாட வாழ்க்கை நிம்மதியாகக் கழிவதற்கும், அவரவர் தத்தம் வேலைகளை எந்தவிதத் தடையோ, இடையூறோ இல்லாமல் தொடர்வதற்கு வழிகோலுவதும்தான். பெருகிவிட்ட மதுபானக் கடைகளும், தெருவுக்குத் தெரு, வட்டத்துக்கு வட்டம், பகுதிக்குப் பகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தும் அரசியல் கட்சிகளால் ஆசிர்வதிக்கப்பட்ட சமூக விரோதக் கும்பல்களும், சராசரிக் குடிமகனின் அடிப்படைப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டிருக்கின்றன. சென்னையில் மட்டுமே ஆரம்பத்தில் காணப்பட்ட "கட்டைப் பஞ்சாயத்து' தாதாக்கள் இன்று தமிழகத்தின் சிறு நகரங்களில்கூடக் காளான்களாகப் பெருகிவிட்டிருக்கின்றனர். தெருவில் மணலும் செங்கல்லும் வந்து இறங்கினால் "மாமூல்' வசூலிக்க வார்டு உறுப்பினரிலிருந்து, தாதா கும்பல்வரை நடத்தும் அடாவடி மிரட்டல்களும், அத்துமீறல்களும், சட்டம் செயலிழந்துவிட்டதைத்தானே எடுத்துரைக்கிறது. அதையெல்லாம்கூட சகித்துக் கொள்ளலாம். தைரியமாகப் பெண்கள் நடமாட முடியவில்லை, வயதானவர்கள் தனியாக வாழ முடியவில்லை, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏற்பட்டால் அதையும், ஆட்சியாளர்களைத் தவறாகத் தேர்ந்தெடுத்தற்காகத் தலையெழுத்தே என்று ஏற்றுக்கொள்ளவா முடியும்? சமீபகாலமாகப் பணத்துக்காக குழந்தைகளைக் கடத்தும் செயல்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது காவல்துறை செயல்படுகிறதா இல்லையா என்கிற சந்தேகம் ஏற்படாமல் இல்லை. சில தினங்களுக்கு முன்பு கோவையில் ஒரு தொழிலதிபரின் இரு குழந்தைகளைக் கடத்திச் சென்று அந்த ஓட்டுநர், ஆற்றில் தள்ளிக் கொலை செய்திருக்கிறார். சிறுமியின் சடலம் கிடைத்து அந்தக் குழந்தையின் இறுதி ஊர்வலத்துக்குத் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தாலே மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பது புரிந்தது. சிறுமியுடைய தம்பியின் சடலமும் மறுநாள் மீட்கப்பட்டது. போலீஸ் தன்னைப் பிடித்துவிடும் என்று பயந்து கொலை செய்ததாக ஓட்டுநர் கூறியுள்ளார். அவர் மட்டும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்து, குழந்தைகளை ஒப்படைத்திருந்தால், அதிகபட்சம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்திருக்கும். குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பர். சரண் அடைந்த ஓட்டுநரை, பெற்றோரே கூட வழக்கில் தீவிரம் காட்டாமல் மன்னித்திருக்கக் கூடும். அதன்மூலம் அந்த ஓட்டுநரின் குடும்பமும் தலைகுனிந்து வாழும் அவலநிலை ஏற்பட்டிருக்காது. சென்னை முகப்பேரில் தனியார் பள்ளியில், 9-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் திங்கள்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளார். சிறுவனின் தந்தை கிரானைட் தொழில் செய்கிறார். இதுவும் பணத்துக்காக நடத்தப்பட்ட கடத்தல்தான் என்று தெரிகிறது. கடந்த ஜூன் மாதத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் குழந்தைகள் இருவர் ஒரு வார இடைவெளியில் கடத்தப்பட்டனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த வேகம் மற்றவர் விஷயங்களில் இல்லாமல் போவது ஏன் என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர். சொத்துகளைப் பறிப்பதற்காக அரசியல்வாதிகளும், ரவுடிகளும் இதுபோல ஆள்கடத்தலைத் தொடங்கி வைத்தார்கள். அவ்வாறு புகாரில் சிக்கி கைதானவர்கள் மீதான வழக்குகள் இன்னும் முடியவில்லை. குற்றவாளிகளின் அரசியல் பின்புலம் காரணமாக, இதுபோன்ற ஆள்கடத்தலில் ஈடுபடுவோரை ஒடுக்க காவல் துறையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லையோ என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சென்னையில் மட்டும் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இவை போலீஸ் வழக்குப் பட்டியலில் வந்திருப்பவை. வழக்கிற்கு வராமல் சம்பந்தப்பட்டவர்களே பைசல் செய்து கொண்டவை இரண்டு, மூன்று மடங்கு அதிகம் இருக்கலாம் என்று காவல் துறையினரே ஒப்புக் கொள்கின்றனர். மணல் கடத்தல், அரிசி கடத்தல், கிரானைட் கற்கள் கடத்தல் இவையெல்லாம் போதாதென்று, கந்துவட்டிக் கும்பலும், கட்டைப் பஞ்சாயத்து கோஷ்டிகளும், கேள்வி கேட்க யாருமில்லாமல் வளைய வருவதுதான், அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தின் இன்றைய நிலைமை. இந்த மாஃபியாக்கள் அனைத்துமே ஏதாவது அரசியல் பின்புலத்தில்தான் இயங்குகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். அரசியல்வாதிகளுடன் சமூகவிரோதிகள் கைகோத்துச் செயல்படுவது தடுக்கப்படாவிட்டால், இங்கே தீவிரவாதம் தலைதூக்காமல் போனாலும், திரைப்படங்களில் காட்டுவதுபோல வெட்டரிவாளும், வீச்சரிவாளும், ஆசிட் பல்புகளும், நாட்டு வெடி குண்டுகளும் கோலோச்சத் தொடங்கும். இரு தினங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூரில் ஒரு பெண்ணை அடித்து, கையைப் பிடித்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற இளைஞர்கள் பற்றி போலீஸில் புகார் தரப்பட்டது. மோட்டார் சைக்கிளின் எண் தவறாக உள்ளது என்று கூறி அவர்களை இன்னும் போலீஸாரால் பிடிக்க முடியவில்லை. அந்த இளைஞர்கள் யாருக்குச் சொந்தமோ? யாருக்கு நெருக்கமோ? நமக்கென்ன தெரியும்? அம்பத்தூர் நகராட்சி கவுன்சிலர் ஒருவரின் மகன் கடந்த மாதம் மாநகரப் போக்குவரத்து ஓட்டுநரை அடித்தாரே, கவுன்சிலர் மீது கட்சி என்னதான் நடவடிக்கை எடுத்தது? வாரிசுகளின் கொட்டத்தை அடக்கக் கட்சித் தலைமை ஏன் தயங்குகிறது? முந்தைய ஆட்சியில் நடக்கவில்லையா என்று கேட்பதோ, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இது குறைவுதான் என்று கூறுவதோ இதற்குச் சமாதானம் ஆகிவிடாது. முந்தைய ஆட்சியில் தவறுகள் நடந்ததால்தானே அந்த ஆட்சி மக்களால் அகற்றப்பட்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அங்கே நடக்கவில்லையா? இங்கே நடக்கவில்லையா? என்று புள்ளிவிவரங்களை அடுக்கி வாய்ப்பந்தல் போடுவதன்மூலம் பிரச்னையைத் திசைதிருப்பாமல், சீர்கெட்டுக்கிடக்கும் சட்ட ஒழுங்கு சூழ்நிலையை சீர்திருத்தாவிட்டால், இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவதற்கு வேறு காரணம் எதுவுமே தேவையில்லை. அரிசி கொடுத்தது, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தது, காப்பீட்டுத்திட்டம், கான்கிரீட் வீட்டுத் திட்டமெல்லாம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாத அரசுக்குத் தேர்தலில் கை கொடுக்காது என்பதுதான் கடந்த காலம் உணர்த்தும் உண்மை!

Tuesday, November 2, 2010

THANKS TO DINAMANI HEADINGS-3.11.2010

தலையங்கம்: வரலாறு காணாத ஊழல்!



03 Nov 2010 01:22,

1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!

Saturday, January 19, 2008